ரெயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு - கொலையா என போலீசார் விசாரணை

திருத்தணி அருகே ரெயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-03-23 13:35 GMT
திருத்தணி, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மகன் தோனிஷ்வரன் (வயது 20). இவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வெளியில் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தோனிஷ்வரன் புறப்பட்டு சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரெயில் திருத்தணி அடுத்த பொன்பாடி ரெயில் நிலையம் அருகே செல்லும் போது தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக, அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கும், பொன்பாடி ரெயில் நிலையத்திற்கும் ரெயிலின் டிரைவர் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற அரக்கோணம் ரெயில்வே போலீசார், தண்டவாளத்தில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தது கல்லூரி மாணவர் தோனிஷ்வரன் என்பதும், இவர் ஆர்.எஸ்.மங்காபுரம் பகுதியில் வசிக்கும் 9-ம் வகுப்பு படிக்கும் மாற்று சமுதாயத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததும் தெரியவந்தது. இந்த காதலுக்கு சிறுமி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து தோனிஷ்வரனின் தந்தை ஜீவானந்தம் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தோனிஷ்வரன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டரா? அல்லது கொலை செய்யப்பட்டு உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுமி மற்றும் அவரது உறவினர்களின் உயிருக்கு மாணவரின் உறவினார்களால் ஆபத்து ஏற்படுவதை தடுக்க திருத்தணி போலீஸ் நிலைய பாதுகாப்பில் வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்