10 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

10 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

Update: 2022-03-23 13:23 GMT
பெருமாநல்லூரில் கோவில் திருவிழாவுக்காக போடப்பட்ட தற்காலிக கடைகளில் ஆய்வு மேற்கொண்டு 10 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவிழா கடைகள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்படி உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவையொட்டி செயல்படும் தற்காலிக கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கோவில் வளாகத்தை சுற்றி தற்காலிகமாக செயல்பட்ட உணவு சார்ந்த கடைகள், தின்பண்ட கடைகள், குளிர்பான கடைகள், உணவகங்கள் என 43 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், முழு முகவரி இல்லாத உணவு பாக்கெட்டுகள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அன்னதான கூடத்தையும் ஆய்வு செய்யப்பட்டது.
கடைகளுக்கு அபராதம்
இந்த ஆய்வின்போது முழு முகவரி, தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாத உணவு பொட்டலங்கள் 32 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவுகள் 5 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. சிறு உணவகங்களில் மசாலா பேஸ்ட் அரைத்து மூடி வைக்கப்படாமல் இருந்த 2 கிலோ மசாலா பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்ததாக 2 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 8 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கலப்படம் மற்றும் உணவு தரம் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்