இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இலவச வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2022-03-23 12:46 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நேற்று திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம் பாதிரிவேடு, அரக்காத்தம்மன் கோவில் குளக்கரையில் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக வசித்துவரும் பழங்குடியின மக்கள் 35 குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுடன் வந்து திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், பாதிரிவேடு, அரக்காத்தம்மன் கோவில் குளக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தோம். ஆனால், இதுநாள் வரையிலும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் வீடு இல்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளோம். இது சம்பந்தமாக எங்கள் குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டரிடம் முறையிட வந்தோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன் தலைமையில், இதுதொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்