வேலூர் அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
வேலூர் அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.;
அடுக்கம்பாறை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நெஞ்சக பிரிவு மற்றும் மாவட்ட காசநோய் மையம் சார்பில் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காசநோய் துணை இயக்குனர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் கவுரி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக டீன் செல்வி கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது காசநோய் காற்றின் மூலம் பரவக்கூடியது. 2 வாரத்திற்கு மேல் இருமல், சளி, காய்ச்சல், பசியின்மை, எடை குறைவு மற்றும் நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் காச நோய் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனை சளிப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். சில சமயங்களில் அறிகுறிகள் இல்லாத போது எக்ஸ்ரே பரிசோதனை மூலமும் நோய் கண்டறிய வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்றார். கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் காச நோய் பிரிவு டாக்டர்கள் பிரபாகரன், பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.