திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட வாகனத்தில் சாமி வீதி உலா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சாமி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 20-ந் தேதி நடந்தது. தொடர்ந்து நடந்த புன்னைமர வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு கருட சேவையும் கோபுர வாசல் தரிசனம் நடந்தது. இதில் கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு பல்லக்கு-நாச்சியார் திருக்கோலம், யோகநரசிம்மர் திருக்கோலம் நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன், முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 5.45 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல், காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது. 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரியும் 29-ந் தேதி கொடியிறக்கமும் நடக்கிறது.