பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை வணிக நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை வணிக நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை வணிக நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
உள்ளாட்சி அமைப்புகள் சோதனை
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள் மற்றும் உறிஞ்சி குழல்கள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.
இவை மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அமைப்புகள் மூலம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக செயல்படுத்தும் பணிகள் முழுமையாக நடைபெறாமல் இருந்தது. தற்போது அரசின் அறிவிப்பின்படி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தல் மற்றும் அபராதம் வசூல் செய்ய உள்ளனர்.
தவிர்க்க வேண்டும்
பொதுமக்கள், சிறிய வணிக விற்பனையாளர்கள், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர மற்றும் பெரிய வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், அனைத்து உள்ளாட்சித் துறை அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.