‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
ஆஸ்பத்திரியில் கூடுதல் வசதிகள்
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கர்ப்பிணிகள், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், பரிசோதனை செய்யவும் இங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
-பொதுமக்கள், தர்மபுரி.
===
பகுதிநேர ரேஷன் கடை
நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி ஊராட்சி சிங்கிலிபட்டி கிராமத்தில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள், ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள கொண்டிசெட்டிபட்டி கிராமத்திற்கு சென்று வருகிறார்கள். இவர்கள், பக்கத்து ஊருக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கிவர சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பகுதிநேர ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சா.விஜயன், சிங்கிலிபட்டி, நாமக்கல்.
==
குண்டும், குழியுமான சாலை
சேலம் அரிசிபாளையம் மெயின் ரோடு பகுதியில் பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், அரிசிபாளையம், சேலம்.
===
சீரமைக்கப்பட வேண்டிய சுகாதார நிலையம்
சேலம் ஆண்டிப்பட்டி பகுதியில் துணை சுகாதார நிலையம் உள்ளது. அந்த கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் விழுந்து சிமெண்டு கற்கள் பெயர்ந்து கீழே விழுகின்றன. இதனால் சுகாதார நிலையத்துக்கு வரும் மக்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஏதாவது விபத்து ஏற்படும் முன் இந்த சுகாதார நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெ.மணிகண்டன், ஆண்டிப்பட்டி, சேலம்.
==
ஆபத்தான கிணறு
சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி ஊராட்சி போயர் தெருவில் திறந்தவெளியில் பொதுகிணறு ஒன்று உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் இந்த கிணற்றை அடிக்கடி எட்டி பார்க்கின்றனர். இதனால் ஏதாவது ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் இந்த கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும்.
-சதீஷ்குமார், தேவியாக்குறிச்சி, சேலம்.
===
புதருக்குள் டிரான்ஸ்பார்மர்
சேலம் தாதம்பட்டி மாரியம்மன் கோவில் ஏரி வீதி தனகோபால் தெருவில் தண்ணீர் தொட்டி, டிரான்ஸ்பார்மர் உள்ள பகுதியில் செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி அளிக்கிறது. மேலும் 2 ஆண்டுகளாக குப்பைகள் அள்ளப்படாமல் இருக்கிறது. இதனால் விஷப்பூச்சிகள் அதிகளவில் நடமாடுகின்றன. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.
-தனகோபால் தெரு மக்கள், தாதம்பட்டி, சேலம்.
===
தேங்கி நிற்கும் மழைநீர்
சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி பி.நாட்டாமங்கலம் கிராமத்தில் 11-வது வார்டு தாழ்வான பகுதி என்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் வீடுகளிலும் மழைநீர் புகுந்துவிடுகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த பகுதியில் மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, பி.நாட்டாமங்கலம், சேலம்.
===
குடிநீர் இணைப்பு வழங்கப்படுமா?
சேலம் மகுடஞ்சாவடி ஊராட்சி 12-வது வார்டு பகுதியில் போதிய அளவில் குடிநீர் கிடைப்பதில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி மத்திய அரசாங்கத்தின் ஜல் ஜீவன் திட்டத்தை விரைவாக செயல்படுத்தி வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, மகுடஞ்சாவடி, சேலம்.
===
பஸ்கள் வருவதில்லை
சேலம் மாவட்டம் வனவாசி கீழ் பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்ல உரிமம் உள்ளது. ஆனால் பெரும்பாலான பஸ்கள், வனவாசி கீழ் பஸ் நிலையத்துக்கு வருவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அனைத்து அரசு பஸ்களும் வனவாசி கீழ் பஸ் நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.சதீஷ்குமார், வனவாசி, சேலம்.
===