ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்க தாமதம்: சேலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக கார் ஜப்தி

ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்க தாமதம் ஆனதால், சேலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக கார் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2022-03-22 23:04 GMT
சேலம்:
ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்க தாமதம் ஆனதால், சேலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக கார் ஜப்தி செய்யப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் ஜெயமணி (வயது 63). நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர். இவர் கடந்த 1995-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் கே.சி.பட்டியில் இருந்து பாய்ச்சல் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலையின் ஒப்புதல் பெற்று சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த பணிக்கு உரிய தொகையை நெடுஞ்சாலைத்துறை வழங்கவில்லை.
எனவே சாலை அமைக்கப்பட்டதற்கு உரிய பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கும் படி அவர் சென்னை தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இதையடுத்து ஜெயமணிக்கு ரூ.1 கோடியே 17 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை அந்த தொகையை வழங்க வில்லை.
கார் ஜப்தி
இதனால் அவர் சேலம் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை நடந்தது. பின்னர் வட்டியுடன் சேர்ந்து ரூ.2 கோடியே 17 ஆயிரம் ஜெயமணிக்கு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பிறகும் அந்த தொகை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் வட்டியுடன் சேர்த்து, ஜெயமணிக்கு ரூ.2 கோடியே 20 லட்சம் வழங்க வேண்டும் என்றும், பணம் தர மறுத்தால் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என்று கடந்த 5-ந்தேதி கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று கோர்ட்டு ஊழியர்கள் சேலம் குரங்குச்சாவடியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஒரு காரை ஜப்தி செய்து அதை சேலம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். 
இதனால் நேற்று குரங்குச்சாவடியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்