இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் தென்காசியில் ஆர்ப்பாட்டம்
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி:
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ரமேஷ், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகையா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முனீஸ்வரன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செந்தாமரைச்செல்வி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சாலமோன், இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சங்கர், வெள்ளத்துரை, கலைச்செல்வி, ராஜ்குமார், ஜேனட் பொற்செல்வி ஆகியோர் பேசினார்கள். ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சிவஸ்ரீ ரமேஷ் சிறப்புரையாற்றினார். முடிவில் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் கிரேஸ் விஜயராணி நன்றி கூறினார்.