ஏறிய ஏணியை எட்டி உதைப்பது பா.ஜ.க.வின் கொள்கை; பெட்ேரால், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்- ஈரோட்டில் முத்தரசன் பேட்டி
ஏறிய ஏணியை எட்டி உதைப்பது பா.ஜ.க.வின் கொள்கை என்று கூறி பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.;
ஈரோடு
ஏறிய ஏணியை எட்டி உதைப்பது பா.ஜ.க.வின் கொள்கை என்று கூறி பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மகத்தான வெற்றி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றிருப்பது, மக்கள் இந்த அணியின் மீது வைத்துள்ள மிகப்பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தை முன்னுதாரணமாக கொண்டு மற்ற மாநிலங்களிலும், தேசிய அளவிலும் இதுபோன்ற ஒரு கூட்டணி உருவாக்கப்பட வேண்டும்.
கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ரூ.1,000 கோடி நிதியை கர்நாடக அரசு ஒதுக்குவது தவறானது. மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளித்து உள்ளது.
வருகிற 28, 29-ந் தேதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
திம்பம் மலைப்பாதை
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள புலிகள் காப்பகம் என்ற பெயரில் திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதேபோல் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது கால்நடைகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது என்று கூறுகிறார்கள. இதுதொடர்பாக வருகிற 4-ந் தேதி கூட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது.
பூரண மதுவிலக்கு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் வருகிற ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடக்கிறது. தேசிய மாநாடு அக்டோபர் மாதத்தில் விஜயவாடாவிலும் நடைபெறுகிறது. தமிழகத்தில் திருமண உதவித்தொகை திட்டம் பெண்களை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அரசு பள்ளிக்கூடங்களில் படித்துவிட்டு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும் படிக்கும் மாணவிகளுக்கும் வழங்க வேண்டும்.
பூரண மதுவிலக்கு தமிழகத்தில் கொண்டு வரவேண்டும் என்பதே எங்களது தொடர் கோரிக்கையாகும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விளம்பரத்தை நோக்கி செயல்பட்டு வருகிறார். அதே வகையில் கவர்னரையும் சந்தித்து பேசி உள்ளார்.
கண்டனம்
5 மாநில தேர்தல் நடைபெறும்போது ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வந்தது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையேற்றம் செய்து இருப்பது வாக்கு வங்கிக்காக ஒன்றிய அரசு செயல்படுவது தெரியவந்து உள்ளது. ஏறிய ஏணியை எட்டி உதைப்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை. எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை நிர்ணயம் செய்கிறது என்று கூறி வருகிறார்கள். மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் உள்ளன. எனவே மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த விலை உயர்வுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.