செங்கோட்டையில் நகர நுழைவு வாயில் கட்டிடத்தை இடிக்கக்கூடாது அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
நகர நுழைவு வாயில் கட்டிடத்தை இடிக்கக்கூடாது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்;
செங்கோட்டை:
செங்கோட்டை நகரசபை கூட்ட அரங்கில் செங்கோட்டை நகர நுழைவுவாயிலில் அப்போதைய கேரள அரசால் கட்டப்பட்ட சங்கு முத்திரை பொறிக்கப்பட்ட துவாரபாலகர் சிலைகளுடன் கூடிய ஆர்ச் (நுழைவுவாயில்) கட்டிடத்தை இடிப்பது சம்பந்தமாக அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் ஆலோசனை கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. நகரசபை தலைவா் ராமலெட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளா் இளவரசன், இன்ஸ்பெக்டா் சியாம்சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகரசபை கவுன்சிலர்கள் ஜெகன், சுடர்ஒளி, சரஸ்வதி, எஸ்.எம்.ரஹீம் (தி.மு.க. நகர செயலாளா்), நகர காங்கிரஸ் தலைவா் ராமர், இளைஞரணி செயலாளா் ராஜீவ்காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சாமி, மாரியப்பன், சுப்பிரமணியன், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலா்கள் ராமதாஸ், ராமசுப்பிரமணியன், அனைத்து சமுதாய நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நூறாண்டு பழமையும் பெருமையும் வாய்ந்த நுழைவு வாயிலை பேணி பாதுகாப்பது செங்கோட்டை நகர மக்களின் கடமையாகும். பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி பாரம்பரியமிக்க நுழைவு வாயில் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க முடியாது எனவும், போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் கூடுதலாக போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.