சிங்கம்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி ஆகாதவர்கள் வாக்குவாதம்

சிங்கம்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி ஆகாதவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

Update: 2022-03-22 21:50 GMT
அம்மாபேட்டை
சிங்கம்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி ஆகாதவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். 
நகை கடன் தள்ளுபடி
அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை சொட்டையனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. 5 சவரனுக்குள் நகை கடன் வைத்தவர்களுக்கு தமிழக அரசு கடனை தள்ளுபடி செய்துள்ளது. அதற்கான சான்றிதழ் அந்தந்த கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் சிங்கம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிலருக்கு கடன் தள்ளுபடி ஆகாமல் இருந்தது. அவர்கள் நேற்று காலை  கூட்டுறவு வங்கியில் சென்று எங்களுக்கு ஏன் நகை கடன் தள்ளுபடி ஆகவில்லை என்று பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். 
அப்போது பணியாளர்கள் விதிமுறைகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களுக்கு பட்டியலில் பெயர் வரவில்லை. எங்களுக்கு வந்த பட்டியல் படி நகைகளை திரும்ப பயனாளிகளுக்கு ஒப்படைத்து வருகிறோம் என்றார்கள்.
மனு மூலம் புகார்
ஆனால் இதில் சமரசம் அடையாமல் தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் பொன்னையா, சந்திரகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கடன் தள்ளுபடி பட்டியலில் பெயர் வராதவர்கள் முறையாக கோபி கூட்டுறவு சங்க துணை பதிவாளருக்கு மனு மூலம் புகார் அளியுங்கள். தகுதியானவர்களை மறுபரிசீலனை செய்து வழங்க நடவடிக்கை எடுப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர். அதன்பின்னரே  வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

மேலும் செய்திகள்