உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் மலையில் நேற்று மர்ம நபர்கள் வைத்த தீ மளமளவென பற்றி எரிந்து மலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து மலையடிவாரத்தில் இருந்து வெளியே வந்த சுமார் 8 வயது ஆண் புள்ளிமான் ஒன்று ஏ.ராமநாதபுரம் கிராமத்தின் அருகே சாலையை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் மோதியதில் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலீசார் மற்றும் வனச்சரக அதிகாரிகள் உயிரிழந்த புள்ளி மானை மீட்டு உடற்கூராய்விற்காக வனச்சரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தரைப்பகுதிக்கு வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தி வருவது போன்றும், ஓடி வரும் போது பஸ் மோதி மான் தூக்கி வீசப்படும் காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் மலையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல்வேறு வன உயிரினங்களும் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மலையடிவாரத்தில் தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.