ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கணேஷ்ராஜா வரவேற்றார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிலம்பரசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரமான ஓய்வூதிய சலுகை கடந்த 1.4.2003 முதல் தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.