விவசாயிகள், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தல்
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 73 ஆயிரத்து 618 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்தத்திட்டத்தில், விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் அனைவருடைய ஆதார் எண்ணையும், வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இணைத்த பின்னர் இந்திய தேசிய கட்டண நிறுவனம் மூலம் பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள 2022-23-ம் நிதி ஆண்டில் நிதியுதவிக்கான அடுத்த தவணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கு எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 606 பயனாளிகள் இணைப்பு செய்யவில்லை. எனவே இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து கொள்ளவும். அவ்வாறு இணைக்கப்படாமல் இருந்தால், ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் வருகிற 31-ந்தேதிக்குள் இணைத்து கொள்ள வேண்டும்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.