பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன்(55). இவர் மாடுகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். சமீபத்தில் மாடுகள் நல்ல விலை போகாததாலும், மாடுகள் விற்றதில் உரிய பணம் பெற முடியாமலும், நஷ்டம் ஏற்பட்டதாலும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 21-ந்தேதி மணிவண்ணன் தனது வயலுக்கு சென்று பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். அங்கு மயங்கிய நிலையில் அவர் கிடந்ததை, பக்கத்து காட்டின் உரிமையாளர் அய்யாவு பார்த்து, மணிவண்ணனின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிவண்ணன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து மணிவண்ணனின் மகன் நவீன்குமார் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.