மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த புளியங்குழி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் சுரேஷ்(வயது 25). இவரது மனைவி திவ்யா(21). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மதுவில் எலி பசையை(விஷம்) கலந்து குடித்துள்ளார். இதனால் மயங்கிய நிலையில் இருந்த சுரேசை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசில் திவ்யா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.