விவசாயியிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது

விவசாயியிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-22 20:27 GMT
தாமரைக்குளம்:

பணமோசடி
அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 52). விவசாயி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், செல்போன் கோபுரம் அமைக்க இடம் கொடுத்தால் முன்பணமாக ரூ.40 லட்சம் மற்றும் மாத வாடகையாக ரூ.40 ஆயிரம் தருவதாக, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராஜேந்திரனை தொடர்பு கொண்ட நபர்கள், செல்போன் கோபுரம் அமைப்பது தொடர்பாக முன்னேற்பாட்டிற்கான தொகை என்று கூறி பலமுறை பணம் பெற்றுள்ளனர்.
இதன்படி அந்த குறுஞ்செய்தியை நம்பி 29.1.2018 முதல் 9.11.2020 வரை ரூ.23 லட்சத்து 98 ஆயிரத்து 900-ஐ தன்னிடம் இருந்து பெற்று அந்த நபர்கள் மோசடி செய்துவிட்டதாக அரியலூர் சைபர் கிரைம் போலீசில் கடந்த 14.5.2021 அன்று ராஜேந்திரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 745-ஐ முடக்கம் செய்தனர். இதையடுத்து அந்த தொகையில் நீதிமன்றத்தின் மூலம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 292 மீட்கப்பட்டு ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தேடுதல் வேட்டை
இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விரைந்து கைது செய்யுமாறு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, இணையக்குற்ற பிரிவு(பொறுப்பு) கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி உத்தரவின்படி, இணையக்குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீசார் ஜாகீர் உசைன், சுரேஷ்பாபு, அரவிந்தசாமி ஆகிய 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இதில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்பட்டையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
4 பேர் கைது
இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டெல்லி சகர்பூர் இந்திரா நகரில் இருந்த மருதுபாண்டியன்(37), ராஜேஷ்(36), முருகேசன்(40), ராஜ்கிஷன் (42) ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 3 மடிகணினிகள், 42 செல்போன்கள், 18 சிம்கார்டுகள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் 19 ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 4 பேரும் டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருவதும், செல்போன் கோபுரம் அமைப்பது, கடன் தருவது, ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவது போன்ற காரணங்களை கூறி மோசடி செய்து இணையக் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரின் வங்கி கணக்குகள், அவர்களின் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளிட்டவை குறித்தும், அவர்கள் தமிழகத்தில் வேறு பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏமாற வேண்டாம்
மேலும் பொதுமக்கள், அவ்வாறு வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏமாற்றம் அடைந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து, வழக்குகளை பதிவு செய்யலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார். முன்னதாக தனிப்படை போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

மேலும் செய்திகள்