ஜி.எஸ்.டி. வரியால் கைத்தறி தொழில் முடங்கும் அபாயம்

ஜி.எஸ்.டி. வரியால் கைத்தறி தொழில் முடங்கும் அபாயம் உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் ராதா கூறினார்.

Update: 2022-03-22 20:17 GMT
ராஜபாளையம்,
ஜி.எஸ்.டி. வரியால் கைத்தறி தொழில் முடங்கும் அபாயம் உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் ராதா கூறினார். 
பொதுக்குழு கூட்டம் 
ராஜபாளையத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தமிழ்நாடு கைத்தறி நெசவு தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நகர செயலாளர் ரவி தலைமையில் நடைபெற்றது. 
கூட்டத்தில் அச்சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி. ராதா, முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு மாநில பொதுச்செயலாளர் ராதா நிருபர்களிடம் கூறியதாவது:- 
கடந்த 6 மாதங்களில் பட்டு நூல் விலை 3 மடங்கு உயர்ந்துள்ள காரணத்தால் பட்டு உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
விலை உயர்வு 
 தட்டுப்பாட்டை சரி செய்ய சீனப்பட்டு நூல் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலை ஏற்றம் காரணமாக ஜவுளி உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வை கட்டுப்படுத்த விலை நிர்ணய குழுவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெசவாளர் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களின் நிதி பங்களிப்பு மூலம் நியமனம் செய்யப்படும் மேலாண் இயக்குனரை திரும்பப்பெற வேண்டும். இலவச சேலை மற்றும் சீருடை காடா துணி உற்பத்தி செய்வதற்கு கைத்தறியில் வழங்கப்பட்ட கூலியை பெடல் தறிக்கும் வழங்க வேண்டும். முடங்கியுள்ள அனைத்து கூட்டுறவு நூற்பாலைகளையும் சீரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி 
கடந்த 28 ஆண்டுகளாக நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. கூலி உயர்வு வழங்குவதுடன், அனைத்து அகவிலைப்படியையும் அடிப்படை கூலி யுடன் வழங்க வேண்டும். 
கைத்தறி நெசவு தொழிலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியால் தொழில் முடங்கும் அபாயம் உள்ளதால் கைத்தறி உற்பத்திக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நெசவாளர்களின் உற்பத்திக்கு தேவையான நூல் தங்கு தடையின்றி கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்