காரில் கடத்திய ரூ.2½ கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்

மேலூர் அருகே காரில் கடத்திய ரூ.2½ கோடி திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-22 20:17 GMT
மேலூர்
மேலூர் அருகே காரில் கடத்திய ரூ.2½ கோடி திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிவகங்கை சாலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். இதில் காரின் உள்ளே மெழுகு போன்ற பொருளை கண்டறிந்தனர். 
அது, திமிங்கலம் உமிழும் அரிய வகை பொருளான திமிங்கல எச்சம்(அம்பர் கிரீஸ்) என்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 2½ கிலோ திமிங்கல எச்சத்தை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
ரூ.2½ கோடி
திமிங்கல எச்சத்தை காரில் கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடியை சேர்ந்த அழகு(வயது 40), நந்தம் சீர்வீடு பகுதியை சேர்ந்த பழனிசாமி(38), நத்தம் பகுதியை சேர்ந்த குமார்(36) ஆகிய 3 பேரை சிறப்பு தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மதுரை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.  கடத்தி வரப்பட்ட 2½ கிலோ திமிங்கல எச்சத்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 2½ கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்த எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? இதில் யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து மதுரையில் உள்ள வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமிங்கல எச்சம் என்றால் என்ன?
20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள், உடலில் இருந்து உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே, அம்பர் கிரீஸ் எனப்படுகிறது. கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர் கிரீஸ் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்கு அம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்துப் பொருளாக இதை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்