கைத்தறி பட்டு நெசவாளர்கள் உண்ணாவிரதம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில், கைத்தறி பட்டு நெசவாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்;
கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில், கைத்தறி பட்டு நெசவாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
பட்டு நெசவுத் தொழிலில் பட்டு ஆடைகள் உற்பத்தி செய்ய தேவையான கோரா பட்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே கோரா பட்டின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கோரா பட்டை இறக்குமதி செய்து அதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சா பட்டு பதுக்கலை தடுக்கவும், பட்டு கொள்முதல் கார்ப்பரேட் மயமாவதை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை உயர்வுக்கு ஏற்பட கச்சாப்பட்டுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கும்பகோணம் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், கும்பகோணம் பட்டு ஜவுளி தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தஞ்சை திருவாரூர் அரியலூர் மாவட்ட தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு, கும்பகோணம் பட்டு நெசவு தொழில் பாதுகாப்பு சங்கம் சார்பில் கும்பகோணத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
முடித்து வைத்தார்
போராட்டத்துக்கு தொழிற்சங்க கூட்டமைப்பின் பொருளாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கும்பகோணம் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் லெனின், செயலாளர் மோகன், மாநகராட்சி உறுப்பினர் அனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதத்தை கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்க செயலாளர் ராயா கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். பட்டு கைத்தறி நெசவாளர் சம்மேளன பொது செயலாளர் முத்துக்குமார் கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே. சரவணன், துணைமேயர் சு.ப. தமிழழகன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சா. ஜீவபாரதி ஆகியோர் நெசவாளர்களின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
உண்ணாவிரதத்தை கும்பகோணம் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சு. கல்யாணசுந்தரம் முடித்து வைத்தார். முடிவில் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி நெப்போலியன் நன்றி கூறினார்.