விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் எடுத்த நடவடிக்கைகள்
விருதுகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி விளக்கம் அளித்தார்.
விருதுநகர்,
விருதுகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி விளக்கம் அளித்தார்.
நடவடிக்கை
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகரில் 22 வயது இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட பாலியல் பலாத்கார கொடுமை குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து 4 பேர் கைது செய்யப்பட்டு காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளாக இருப்பதால் அவர்களை கையகப்படுத்தி இளைஞர் நீதிமன்றகுழுமம் முன்பாக ஆஜர் செய்து அவர்களின் உத்தரவுபடி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது பாதிக்கப்பட்ட இளம்பெண் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூக நலத்துறையின் ஆலோசனை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்.
தாமதம் தவிர்ப்பு
பாலியல் வழக்குகளில் புகார் வந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வழக்குகள் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., மற்றும் சரக டி.ஐ.ஜி.க்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகாமல் இருப்பது குறித்து அவர்களுக்கு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
விழிப்புணர்வு
மேலும் மாணவ - மாணவிகளிடையே ஒழுக்கத்தின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மாயமான பெண்கள் குறித்தும் விரிவாக தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.