மாற்றுத்திறனாளிகள் 16 பேர் மன்னார்குடி ரெயில் நிலையத்தில் கைது
மாற்றுத்திறனாளிகள் 16 பேர் சென்னை போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட மன்னார்குடி ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடி:
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர். இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னையில் நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட தலைவர் சந்திரா தலைமையில் மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்வதற்காக மன்னார்குடி ரெயில் நிலையம் வந்தனர். அப்போது அங்கு வந்த மன்னார்குடி போலீசார் ரெயிலில் ஏறி புறப்படுவதற்கு தயாராக இருந்த சந்திரா உள்ளிட்ட 16 மாற்றுத்திறனாளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.