ராசிபுரம் மார்க்கெட்டில் கடைகளின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு
ராசிபுரம் மார்க்கெட்டில் கடைகளின் கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
ராசிபுரம்:-
ராசிபுரம் மார்க்கெட்டில் கடைகளின் கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தினசரி மார்க்கெட்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தினசரி மார்க்கெட் கடைவீதி அருகில் இயங்கி வருகிறது. கொரோனா காலத்தில் அங்கிருந்த கடைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் பெய்த மழையின் காரணமாக சுமார் 100 அடி நீளத்திற்கு உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
மின்கம்பம் சரிந்தது
ஏற்கனவே கடைகளின் மேற்கூரையை தாங்கி பிடிக்கும் இரும்பு தூண்கள் துருப்பிடித்து இருந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் திடீரென சரிந்து விழுந்ததாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால் உயிர்சேதம் ஏதும் நிகழவில்லை.
இதற்கிடையே அந்தப் பகுதியில் இருந்த மின் கம்பம் சரிந்து விழுந்ததால் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ராசிபுரம் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர், கவுன்சிலர் விநாயகமூர்த்தி மற்றும் நகராட்சி அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.