கோவில், கடைகளில் திருடிய 3 பேர் கைது

ராசிபுரம் கோவில் மற்றும் கடைகளில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-03-22 18:55 GMT
ராசிபுரம்:- 

ராசிபுரம் கோவில் மற்றும் கடைகளில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

உண்டியல் பணம் திருட்டு

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராசிபுரம் வி.நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் ராசிபுரம் டவுன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள கோவிலில் உண்டியல் பணம் திருட்டு, சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள பேக்கரி கடைகள் உள்பட 4 கடைகளில் செல்போன் மற்றும் பணம் திருட்டு, முத்துக்காளிப்பட்டி கிராமத்தில் ஒருவரது கடையில் திருட்டு உள்பட பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்தன. கொள்ளையர்கள் யார் என்று அவர்களை கண்டுபிடிப்பதில் ராசிபுரம் போலீசார் தீவிரம் காட்டினர்.

தனிப்படை போலீசார்

கொள்ளையர்களை பிடிக்க ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நேற்று மசக்காளிப்பட்டி அருகில் ரோந்து சென்ற போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ராசிபுரம் கோவில் உண்டியலில் திருடியது தெரிய வந்தது.

3 பேர் கைது

அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ரப்பர் என்கிற ஜெயக்குமார் (வயது 25), அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் (32), சேலம் தாதகாப்பட்டி யைச் சேர்ந்த மைக்கேல் என்கிற விஜய் (23) என்பது தெரியவந்தது. 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும், கொள்ளை அடிப்பதற்கு பயன்படுத்திய இரும்பு கம்பி, கத்தி, மங்கி கேப், கையுறை, 2 செல்போன், ரூ.5,200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்