குமாரபாளையத்தில் பூட்டிக் கிடந்த பள்ளிக்கூடம்
உதவியாளர் சாவியை மாற்றி எடுத்து சென்றதால் குமாரபாளையத்தில் பள்ளிக்கூடம் பூட்டி கிடந்தது. இதனால் மாணவர்கள் சாலையில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம்:-
குமாரபாளையத்தில் சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் உதவியாளர் பள்ளியின் கேட் சாவியை பள்ளி அலுவலக அறையில் வைத்து விட்டு வேறு சாவியை எடுத்துச் சென்றுவிட்டார். இதே பள்ளி வளாகத்தில் சிலம்பம் பயிற்சி நடந்து வருகிறது. பயிற்சி அளிப்பவர் நேற்று முன்தினம் மாலை பயிற்சியை முடித்து விட்டு கேட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலை பள்ளியின் உதவியாளர் தன்னிடம் இருந்த சாவி போட்டு பூட்டை திறக்க முயன்று முடியவில்லை. அப்போதுதான் தெரிந்தது கேட் சாவி உள்ளே வைத்துவிட்டு வேறு சாவியை எடுத்து சென்றதை அறிந்தார். சிலம்பம் பயிற்சி கொடுத்தவரை அழைத்து மாற்று சாவியை கேட்டனர். அவர் வர தாமதம் ஆனது. இதனால் பள்ளி திறக்க காலதாமதம் ஆனதால், பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடம் முன்பு சாலையில் ஆங்காங்கே திரண்டு நின்றனர். இதனை அறிந்த அந்த பகுதி கவுன்சிலர் ராஜ் விரைந்து வந்தார். கேட் பூட்டை உடைத்து மாணவ- மாணவிகள் உள்ளே செல்ல அனுமதித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.