நிலத்தடி நீர்தான் மனித வாழ்வின் அடிப்படை நீர் ஆதாரம்
நிலத்தடி நீர்தான் மனித வாழ்வின் அடிப்படை நீர் ஆதாரமாகும் என்று உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சியில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
திருவாரூர்:
நிலத்தடி நீர்தான் மனித வாழ்வின் அடிப்படை நீர் ஆதாரமாகும் என்று உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சியில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
உலக தண்ணீர் தினம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குடிநீர் தர பரிசோதனை தொடர்பான செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இதையடுத்து கலெக்டர் கூறியதாவது:-
சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படும் நிலையில் தண்ணீரின் அவசியம் குறித்து நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்களுக்கும் தண்ணீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஒவ்வொருவர் வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும். மழைநீரினை சேகரித்து நீர்வளத்தினை மேம்படுத்திட வேண்டும். நிலத்தடி நீர்தான் மனித வாழ்வின் அடிப்படை நீர் ஆதாரம் என்பதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சண்முகசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சடையப்பன், உதவி நிர்வாக பொறியாளர்கள் கோபிநாத், ராமசாமி, உதவி நில நீர் வல்லுனர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.