கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய நிலை - இல்லத்தரசிகள் வேதனை

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்று இல்லத்தரசிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

Update: 2022-03-22 18:28 GMT
ராமநாதபுரம், 

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்று குடும்ப பெண்கள் வேதனை அடைந்து உள்ளனர்.'

சிலிண்டருக்கு ரூ.50 உயர்வு

நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.50 உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பப் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த குடும்ப தலைவி யாமினி:-

ராமநாதபுரத்தில் ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.957 ஆக இருந்த நிலையில் வீடுகளில் டெலிவரி செய்யும் போது ரூ.1000 வசூலித்தனர். தற்போது வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. இது ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை பெரிதும் பாதிக்கும். ஏற்கனவே குறைந்த வருவாயில் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில் இது மேலும் கூடுதல் சுமையாகி விட்டது. தற்போது கொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் மீண்டு வரக்கூடிய சூழலில் இதுபோன்ற விலை உயர்வுகளை தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விறகு அடுப்பில்...

ராமேசுவரம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த சந்தியா கூறியதாவது:-

தற்போது கியாஸ் சிலிண்டர் ரூ. 956 ஆக உள்ளது.சிலிண்டர் கொண்டு வந்து இறக்குவதற்கு தனியாக கூலி என சேர்த்து ரூ.1010 வழங்கி வருகின்றோம். ஏற்கனவே சமையல் கியாஸ் அதிக விலை இருந்துவரும் நிலையில் மேலும் ரூ.50 உயர்வு என ஏற்றுக்கொள்ள முடியாத விலைதான். இதுபோன்று தொடர்ந்து சமையல் கியாஸ் விலை உயர்ந்து வரும் பட்சத்தில் சமையல் கியாஸ் வாங்குவதை நிறுத்தி விட்டு மீண்டும் விறகு அடுப்பில் சமையல் செய்ய வேண்டிய நிலைமை வந்து விடும். சிலிண்டர் பதிவு செய்து ஆரம்பத்தில் வங்கி கணக்கில் கியாஸ் சிலிண்டருக்கான மானிய தொகை சரியாக ஏறி வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக சிலிண்டருக்கான மானிய தொகை கணக்கில் ஏறுவது கிடையாது. இதே நிலைமை நீடிக்கும் பட்சத்தில் குடும்பத் தலைவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமையல் கியாஸ் சிலிண்டருடன் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். தற்போது ரூ.50 விலை உயர்வு நடுத்தர குடும்பத்தினரை மிகவும் பாதிக்கும்.

பரமக்குடியை சேர்ந்த குடும்பத்தலைவி நளினி காயத்திரி:-

 5 மாநில தேர்தலுக்கு பிறகு மீண்டும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. மேலும் கியாஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்ட மானியமும் குறைந்துவிட்டது.இதனால் குடும்பங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே மாதம்தோறும் பட்ஜெட் போட்டு வாழ்பவர்களுக்கு இந்த விலை உயர்வு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மறு பரிசீலனை 

திருவாடானையைச் சேர்ந்த சுமதி:-

கியாஸ் சிலிண்டர் விலையை அடிக்கடி உயர்த்தி வருவது பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் குடும்ப பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.தொண்டி, திருவாடானை பகுதியில் ஏற்கனவே ஒரு சிலிண்டர் விலை ரூ.1050-க்கு வாங்கி பயன்படுத்தி வந்தோம். இதுவே அதிகபட்சம்.தற்போது மேலும் 50 ரூபாய் உயர்த்தி இருப்பது கூடுதல் சுமையாகியுள்ளது .ஏழை, எளிய நடுத்தர மக்கள் இனிமேல் கியாஸ் சிலிண்டர் வாங்கி பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு பழையபடி விறகு வைத்து சமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தும் அரசு கூடுதல் மானியம் வழங்கினால் மட்டுமே ஓரளவு சமாளிக்க முடியும்.அரசு விலை உயர்வை மறு பரிசீலனை செய்து கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்