“இலங்கையில் இருந்து இன்னும் நிறைய பேர் தமிழகம் வருவார்கள்”-தப்பி வந்தவர்கள் கூறிய உருக்கமான தகவல்கள்

இலங்கையில் இருந்து இன்னும் நிறைய பேர் தமிழகம் வருவார்கள் என அங்கிருந்து தப்பி வந்தவர்கள் உருக்கமுடன் கூறினார்கள்.;

Update: 2022-03-22 18:09 GMT
ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து இன்னும் நிறைய பேர் தமிழகம் வருவார்கள் என அங்கிருந்து தப்பி வந்தவர்கள் உருக்கமுடன் கூறினார்கள்.

விலைவாசி உயர்வு

தனுஷ்கோடிக்கு அகதியாக 2 குழந்தைகளுடன் தப்பி வந்த இலங்கை பெண் கியூரி (மன்னார் மாவட்டம் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்தவர்) கூறியதாவது:-
இலங்கையில் நாளுக்கு நாள் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ அரிசி ரூ.250, பிஸ்கட் பாக்கெட் ஒன்று ரூ.230, ரொட்டி ஒரு பாக்கெட் 100 ரூபாய், பால், பருப்பு 300 ரூபாய் என அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்து விட்டது. நான் எனது கணவருடன் ஏற்பட்ட மன வருத்தத்தால் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகின்றேன். ஆனால் தற்போது உயர்ந்து வரும் விலைவாசி உயர்வால் குழந்தைகளுக்கு எதுவும் வாங்கி கொடுக்க முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே குழந்தைகளும், நானும் சரியாக சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டோம். இன்னும் அங்கு அதிகமானோர் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கஷ்டத்தில் தவித்து வருகின்றனர். எங்களைப் போல் இன்னும் நிறைய பேர் அகதிகளாக வர வாய்ப்புகள் உள்ளது. 
தலைமன்னாரில் இருந்து 2 படகோட்டிகள் எங்களை படகில் ஏற்றி நள்ளிரவு நேரத்தில் மணல்திட்டு பகுதியில் இறக்கி விட்டு, இந்தியாவிலிருந்து படகில் வந்து ஏற்றிச் செல்வார்கள் என கூறிவிட்டு திரும்பி சென்று விட்டனர். படகிற்கு ரூ.1 லட்சம் கொடுத்துள்ளேன். என் தாயார் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். அதனால் அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக இலங்கையிலிருந்து குழந்தைகளுடன் படகு மூலம் தப்பி வந்து விட்டேன். தமிழகத்துக்கு பிழைப்பு தேடி வந்துள்ளோம்.  இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

போர் சமயத்தில் கூட...

இதேபோல் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த மன்னார் பகுதியை கஜேந்திரன், அவரது மனைவி மேரி கிளாரா கூறும் போது, “குறிப்பாக குழந்தைகளுக்கான 400 மில்லி பால் பாக்கெட் ஒன்று 800 ரூபாய், முட்டை 35 ரூபாய் என இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துவிட்டது. இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உச்சக்கட்ட போர் நடந்த சமயத்தில் கூட இதுபோன்று பொருட்களின் விலை உயர்வு ஏற்படவில்லை” என்று உருக்கமுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்