சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
குடியாத்தத்தில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் நகராட்சி 35-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக சரியான குடிநீர் வினியோகம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.