கலைஞர் நகர மேம்பாட்டு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

விழுப்புரம் நகராட்சியில் நடந்து வரும் கலைஞர் நகர மேம்பாட்டு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-03-22 17:39 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மூலம் டாக்டர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பில் கீழ்பெரும்பாக்கம் வீட்டு வசதி குடியிருப்பு மற்றும் திடீர்குப்பம், ஏ.டி.எம். நகர் ஆகிய பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கீழ்பெரும்பாக்கம் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் ரூ.2.60 லட்சம் மதிப்பில் 125 மீட்டர் நீளம் கொண்ட பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், அதே பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருவதையும் நேற்று மாவட்ட கலெக்டர் மோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணிகளின் தன்மை குறித்து கேட்டறிந்ததோடு இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். 

தாமதமின்றி முடிக்க...

அதனை தொடர்ந்து திடீர்குப்பத்தில் வார்டு எண் 4-ல் ரூ.8.10 லட்சம் மதிப்பில் 100 மீட்டர் நீளமும், வார்டு எண் -8 பகுதியில் ரூ.13.30 லட்சம் மதிப்பில் 193 மீட்டர் நீளம் கொண்ட பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதை கலெக்டர் மோகன், பார்வையிட்டதுடன், நடைபெற்ற பணியின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை காலதாமதமின்றி திட்டமிட்ட காலத்திற்குள் முடித்திடவும், பணிகள் நடைபெறும்போது பொறியாளர்கள் உடனிருந்து ஆய்வு செய்து பணிகளை முழுமையாக முடித்திட உறுதுணையாக இருப்பதுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப விரைந்து செயல்பட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, நகரமன்ற கவுன்சிலர்கள் பத்மநாபன், பத்மாவதி, தி.மு.க. நகர செயலாளர் சக்கரை உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்