தியாகதுருகம் அருகே 2 ஆண்டுகளாக கிராம சேவை மைய கட்டிடத்தில் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளி போதிய வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
தியாகதுருகம் அருகே 2 ஆண்டுகளாக கிராம சேவை மைய கட்டிடத்தில் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளி போதிய வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே வடபூண்டி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 48 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில் பழுதடைந்த இப்பள்ளி கட்டிடம் மழை பெய்தால் தண்ணீர் ஒழுகும் நிலையில் இருந்ததையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள கிராமசேவை மைய கட்டிடத்துக்கு பள்ளி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இங்கு போதிய இட வசதி இல்லாமல் ஒரே அறையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 48 மாணவ-மாணவிகளும் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதையடுத்து பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாணவர்கள் நலன் கருதி புதிய பள்ளிக்கட்டிடம் கட்டத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.