உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலம். கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்
உலக தண்ணீர் தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர்
உலக தண்ணீர் தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
உலக தண்ணீர் தினம் உலகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே நடந்தது. வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அண்ணாசாலை, மக்கான் சிக்னல் சந்திப்பு, பழைய பஸ்நிலையம், தெற்கு போலீஸ் நிலையம், அண்ணாசாலை வழியாக சென்று வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில், குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
2 இடங்களில் தடுப்பணை
அதைத்தொடர்ந்து உலக தண்ணீர் தினத்தையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் அவர் அங்கு களநீர் பரிசோதனையில் குடிநீர் தரத்தை ஆய்வு செய்வதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் நகரை சுற்றியுள்ள மலைகளில் திடீரென தீப்பற்றி எரிகிறது. சமூக விரோதிகள் தீ வைப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வேலூர் மாநகராட்சிக்கு 63 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது குடிநீர் குழாய் உடைப்பு, பழுது காரணமாக 55 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு 63 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 2 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான டெண்டர் விரைவில் விடப்படும் என்று தெரிவித்தார்.