அங்காடியா வழக்கில் தொடர்புடைய ஐ.பி.எஸ். அதிகாரி சவுரப் திரிபாதி இடைநீக்கம்

அங்காடியா வழக்கில் தொடர்புடைய ஐ.பி.எஸ். அதிகாரி சவுரப் திரிபாதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-03-22 17:14 GMT
கோப்பு படம்
மும்பை, 
அங்காடியா வழக்கில் தொடர்புடைய ஐ.பி.எஸ். அதிகாரி சவுரப் திரிபாதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அங்காடியா வழக்கு
மும்பையில் பாரம்பரியமான அங்காடியா கூரியர் சேவை நடந்து வருகிறது. இவர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தங்கம், பணம் போன்றவற்றை எடுத்து செல்வார்கள். இந்தநிலையில் கடந்த டிசம்பரில் அங்காடியா அமைப்பினர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தனர். 
அந்த புகாரில், தங்கள் நடவடிக்கைகள் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் கொடுப்பதாக சில போலீசார் தங்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும், மாதந்தோறும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கூறியிருந்தனா். இந்த புகார் தொடர்பாக கூடுதல் கமிஷனர் திலிப் சாவந்த் தலைமையில் விசாரணை நடந்தது.
விசாரணைக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து எல்.டி.மார்க் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகளை கைது செய்தனர். 
பணியிடை நீக்கம்
இந்தநிலையில் அங்காடியாக்களிடம் பணம் பறித்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரியான துணை கமிஷனர் சவுரப் திரிபாதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சவுரப் திரிபாதி கடந்த மாதம் 18-ந் தேதி முதல் பணிக்கு வரவில்லை. எனவே போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதற்கிடையே வழக்கு தொடர்பாக போலீசார் சவுரப் திரிபாதியின் வீட்டுவேலைக்காரரை லக்னோவில் கைது செய்து உள்ளனர். 
இந்தநிலையில் சவுரப் திரிபாதியை பணியிடை நீக்கம் செய்து மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது. உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்காமல் விடுப்பில் சென்றது, குற்ற வழக்கில் சிக்கியது போன்ற காரணங்களுக்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக உள்துறை கூறியுள்ளது.

மேலும் செய்திகள்