வாடகை செலுத்தாததால் 6 கடைகளுக்கு சீல் விருத்தாசலத்தில் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
விருத்தாசலத்தில் வாடகை செலுத்தாததால் 6 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர், தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை சிலர் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்.
இதன்மூலம் மொத்தம் ரூ. 13 கோடி வரை வரி பாக்கி இருந்தது. தற்போது, நகராட்சி ஆணையாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் வரி வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வரி தராத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வாடகை தராத கடைகளுக்கு சீல் வைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் வரிபாக்கி வைத்துள்ளவர்கள், அதை செலுத்தும் பணியில் முனைப்பு காட்டி வருகிறார்கள். கடந்த சில நாட்களில் மட்டும் ரூ. 50 லட்சம் வரி பாக்கி வசூல் ஆகி இருக்கிறது.
கடைகளுக்கு சீல்
இந்த நிலையில், விருத்தாசலம் மீன் மார்க்கெட்டில் உள்ள நகராட்சி கடைகளில் வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த 5 கடைகளுக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதற்கிடையே, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் காலனி தைக்கும் கடையை வாடகைக்கு எடுத்து, அங்கு காலனி தைக்காமல் டீக்கடை நடத்தி வந்த ஒருவர், நகராட்சிக்கு உரிய வாடகை பாக்கியை செலுத்தாமல் இருந்தார். அவரிடம் அதிகாரிகள் வசூலிக்க சென்ற போது, ரூ. 44 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி உள்ளார்.
ஆனால் அந்த காசோலையை வங்கியில் கொடுத்த போது, அதில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து நகராட்சி சார்பில் விருத்தாசலம் போலீசில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தீவிரப்படுத்தப்படும்
இந்நிலையில் காசோலை கொடுத்தவரின் கடைக்கும் அதிகாரிகள் அதிரடியாக நேற்று சீல் வைத்தனர். அப்போது ஆணையாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறுகையில், வரி மற்றும் வாடகை வசூலிக்கும் பணி தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் உரியனடியாக தொகையை கட்ட முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது நகராட்சி மேலாளர் சிவகுமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.