கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து 47 நெல் மூட்டைகள் திருட்டு

கீழ்வேளூர் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து 47 நெல் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-03-22 17:05 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து 47 நெல் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு நேரடி கொள்முதல் நிலையம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே பட்டமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சக்திவேல் என்பவர் பட்டியல் எழுத்தராகவும், ரமேஷ் என்பவர் உதவியாளராகவும், எழில் என்பவர் இரவு நேர காவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.   
நேற்று முன்தினம் விவசாயிகளிடம் இருந்து 580 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த ‌நெல் மூட்டைகளை கொள்முதல் நிலைய வாசல் முன்பு தார்பாய் போட்டு மூடி வைத்தனர்.‌ இரவு வழக்கம்போல் பணி முடிந்து ஊழியர்கள் கொள்முதல் நிலையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
47 நெல் மூட்டைகள் திருட்டு
இந்த நிலையில் நேற்று காலை சுமை தூக்கும் தொழிலாளர்கள் வந்து பார்த்தபோது கொள்முதல் நிலையத்தின் முகப்பில் உள்ள இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பட்டியல் எழுத்தர் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்தனர். 
உடனே அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த 580 மூட்டைகளில் 47 நெல் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.38 ஆயிரத்து 728 இருக்கும் என கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் சக்திவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
நேற்று முன்தினம் கொள்முதல் நிலைய இரவு காவலர் விடுமுறையில் சென்றதால் நோட்டமிட்ட மர்ம நபர்கள், நெல் மூட்டைகளை திருடி சென்றுள்ளனர். 
கீழ்வேளூர் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் திருட்டு போன சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்