தொப்பூர் கணவாயில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் படுகாயம்
தொப்பூர் கணவாயில் டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.;
நல்லம்பள்ளி:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இருந்து பழனிக்கு சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பூபதிராஜ் (வயது48) என்பவர் ஓட்டி வந்தார். தொப்பூர் கணவாயில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.