காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5000 கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.;
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியது.
இந்தநிலையில் கர்நாடகா, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அலுவலர்கள் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் கண்காணித்து வருகின்றனர். கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.