கிருஷ்ணகிரி நகராட்சியில் வாடகை கட்டாத 4 கடைகளுக்கு சீல்
கிருஷ்ணகிரி நகராட்சியில் வாடகை பணம் கட்டாத 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 5 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி:
நிலுவை தொகை
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடை வாடகை, குத்தகை தொகை, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகள் கட்டாதவர்களிடம் நகராட்சி ஆணையாளர் முருகேசன் தலைமையிலான அலுவலர்கள் குழுக்களாக சென்று நிலுவை தொகைகளை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்ற அவர்கள் கடைகள், வணிக வளாகங்களுக்கு சென்று வாடகை கட்டாதவர்களுக்கு நோட்டீசும், நீண்ட காலமாக வாடகை கட்டாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறியதாவது:-
கடைகளுக்கு சீல்
மார்ச் மாத இறுதியில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, நிலுவை தொகைகளை குழுக்களாக சென்று நகராட்சி அலுவலர்கள் வசூலித்து வருகிறார்கள். இதில், நீண்ட நாட்களாக வாடகை கட்டாத பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் உள்ள தலா 2 கடைகள் என மொத்தம் 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நீண்டகாலமாக குடிநீர் கட்டணம் கட்டாத, அப்பண்ணன் தெரு, டி.பி.ரோடு, நரசிம்மசாமி தெரு ஆகியவற்றில் 5 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் ஒரே நாளில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு 19 லட்ச ரூபாய் நிலுவைத்தொகை வசூலானது. இவ்வாறு அவர் கூறினார்.