அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் - கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாப சாவு

ஹாசனில் அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update: 2022-03-22 16:42 GMT
ஹாசன்:
ஹாசனில் அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

5 பேர் பலி

பெங்களூருவில் இருந்து சிக்கமகளூரு நோக்கி நேற்று  அரசு பஸ் புறப்பட்டு ெசன்றது. அந்த பஸ், நேற்று காலை ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா ஆரோஹள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சும், எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. 

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும் அரசு பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இந்த விபத்தை பார்த்ததும், அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக பலியானார்.  

கல்லூரி மாணவர்கள்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் விபத்தில் பலியான 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் பேளூரை சேர்ந்த அக்மல், ஜலானி, கைப், மோஹின், அக்னான் என்பதும், அவர்கள் 5 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் காரை அதிவேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. 

பேளூரை சேர்ந்த 5 பேரும், அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தனர். அவர்கள் கல்லூரிக்கு செல்லாமல் காரில் ஹாசன் நோக்கி வந்தபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.

சோகம்

பலியான 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்களின் பெற்றோர்கள் குவிந்தனர். அவர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுகுறித்து பேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்