உத்தவ் தாக்கரே மைத்துனர் சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை அதிரடி
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மைத்துனரின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது.
மும்பை,
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மைத்துனரின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது.
சொத்துக்கள் முடக்கம்
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீதர் மாதவ் பதான்கர். இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் அமலாக்கத்துறை இவரது நிறுவனத்திற்கு சொந்தமான தானே வார்தக் நகரில் கட்டப்பட்டுள்ள ரூ.6.45 கோடி மதிப்பிலான 11 வீடுகளை முடக்கியது.
புஷ்பக் புல்லியன் என்ற நிறுவனத்திற்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது.
சிவசேனா கருத்து
இந்தநிலையில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை குறித்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகையில், "பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆட்சிக்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய முகமையின் இந்த நடவடிக்கை சர்வாதிகாரத்தை காட்டுகிறது" என்றார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், "இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பின்னால் அரசியல் உள்ளது. மத்திய முகமைகள் தவறாக பயன்படுத்தும் பிரச்சினை இன்று நாடு சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. சிலரை துன்புறுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.
-------------