மங்கலம் ஊராட்சிக்கு எல்அண்டுடி தனியார் நிர்வாகம் ஒரு நாளைக்கு 13 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மங்கலம் ஊராட்சிக்கு குடிநீர் வழங்க வேண்டிய அளவைவிட குறைவாக குடிநீர் வழங்கியதாகவும் நேற்று 2 லட்சம் லிட்டர் மட்டுமே குடிநீர் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் முறையாக குடிநீர் வழங்காத தனியார் நிர்வாகத்தை கண்டித்து மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் மங்கலத்தில் சாலை மறியல் நடைபெற்றது.
மறியலில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹா நசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது 2 நாட்களில் எல்அண்டுடி நிர்வாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மங்கலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்க வேண்டிய குடிநீரை பேச்சுவார்த்தை மூலமாக உரிய முறையில் பெற்றுத்தருவதாக கூறினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மங்கலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.