காரைக்காலில் அம்மையார் ஐக்கிய விழா
காரைக்காலில் அம்மையார் ஐக்கிய விழா நடைபெற்றது.
காரைக்கால், மார்ச்.22-
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 17-ந் தேதி தேரோட்டம் நடந்தது. இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக நேற்று சுவாதி நட்சத்திரத்தில் அம்மையார் ஐக்கிய விழா நடைபெற்றது.
இதையொட்டி காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இரவில் விசேஷ அலங்காரத்தில் காரைக்கால் அம்மையார் வீதிஉலா சென்றது. அப்போது பக்தர்கள் அம்மையாருக்கு பூரண கும்பம் வைத்து வழிபட்டனர்.
வீதியுலாவின் நிறைவாக கைலாசநாதர் கோவிலுக்கு சென்று, இறைவனிடம் அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி சிறப்பு தீபாராதனையுடன் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.