கோத்தகிரியில் பெய்த பலத்த மழையால் சாலையில் மரம் விழுந்தது

கோத்தகிரியில் பெய்த பலத்த மழையால் சாலையில் மரம் விழுந்தது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-03-22 16:09 GMT
கோத்தகிரி

கோத்தகிரியில் பெய்த பலத்த மழையால் சாலையில் மரம் விழுந்தது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

கோத்தகிரியில் மழை

மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வனப்பகுதியில் அவ்வப்போது தீப்பிடித்து வருகிறது. எனவே கோடைமழையை பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஊட்டியில் மழை பெய்தது. கோத்தகிரி பகுதியில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை காரணமாக சாலை ஓரத்தில் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிந்து சாலையில் விழுந்தன. 

சாலையில் மரம் விழுந்தது

மேலும் கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு கிராமத்துக்கு செல்லும் வழியில் சாலை ஓரத்தில் உள்ள யூகலிப்டஸ் மரம் திடீரென்று சரிந்து சாலையில் விழுந்தது. 

இதனால் அந்த வழியாக செல்லும் மின்கம்பிகளும் அறுந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்க விரைந்து சென்றனர். 

பின்னர் அவர்கள் அந்த வழியாக தற்காலிகமாக போக்குவரத்தை நிறுத்தினர். பிறகு சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது. 

போக்குவரத்து பாதிப்பு

இதற்கிடையே மின்வாரிய ஊழியர்களும் அங்கு விரைந்து வந்து, அறுந்து விழுந்த மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து பணிகளும் முடிந்த பின்னா் சாலையில் போக்குவரத்து சீரானது. 

இந்த சாலையில் மரம் விழுந்தபோது, அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் நடக்கவில்லை. அத்துடன் இந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந் தனர்.  காலை 8 மணி நிலவரப்படி கோத்தகிரியில் 28 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த மழை காரணமாக கோத்தகிரியில் நிலவிய வெப்பம் தணிந்து சீதோஷ்ண நிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

மேலும் செய்திகள்