மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பதிவு செய்த கரும்புகளை வெட்ட நடவடிக்கை சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பதிவு செய்த கரும்புகளை வெட்ட நடவடிக்கை சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை

Update: 2022-03-22 15:42 GMT
மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் கரும்பு மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  இப்பகுதியில் பயிரிடப்படும் கரும்பு பயிரை விவசாயிகள் அறுவடை செய்து மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் கரும்புகளை பதிவு செய்து அதை குறிப்பிட்ட காலத்திற்குள் வெட்டுவதற்கு அனுமதி வழங்கப் படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு 9, 10-வது மாதம் முடிய கரும்புகள் பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும் அவற்றை வெட்டுவதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஆண்டு பயிராக கரும்பு பயிர் சாகுபடி செய்து வருகிறோம். ஒரு ஆண்டு முடிந்து பல மாதங்கள் ஆன பின்னரும்  கரும்பு பயிரை வெட்டுவதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் கரும்பின் தரம் குறைந்து வருவது மட்டுமல்லாமல் எடையும் அதிகளவில் குறைந்து வருவதால் பல ஆயிரம் செலவு செய்து பயிரிடப்பட்ட கரும்பு பயிர்கள் வீணாகி வருகிறது. கடந்த ஆண்டு மழை பெய்ததால் கரும்பு பயிர் சேதம் அடைந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கரும்பு பயிர்கள் காய்ந்து வருகிறது. எனவே பதிவு செய்த கரும்புகளை வெட்டுவதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்