காலாப்பட்டு சிறை கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி

காலாப்பட்டு சிறையில் கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.;

Update: 2022-03-22 15:39 GMT
புதுச்சேரி, மார்ச்.22-
காலாப்பட்டு சிறையில் கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
விளையாட்டு பயிற்சி
இந்தியன் ஆயில் நிறுவனம் ‘பரிவர்த்தன் - சிறைச்சாலையில் இருந்து பெருமை மிக்க வாழ்வுக்கு’ என்ற திட்டத்தில் 8 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 15 சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க உள்ளது.
இந்த திட்டம் புதுச்சேரி சிறையில் உள்ள கைதிகளுக்கும் செயல்படுத்தப்படுகிறது. இதனை இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் ஸ்ரீகாந்த் வைத்யா டெல்லியில் இருந்தபடி இணைய வழியில் தொடங்கிவைத்தார். புதுவை சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங், இந்தியன் ஆயில் தென்மண்டல செயல் இயக்குனர் சைலேந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக இயக்கம்
இதன்படி சிறை கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிப்பதுடன் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சாதனங்களையும் இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்குகிறது. இதனால் சிறைவாசம் அனுபவித்ததன் காரணமாக உண்டாகும் தாழ்வு மனப்பான்மை ஏற்படாமல் விடுதலைக்குப்பின் சமூகத்தில் சகஜமாக வாழ உறுதுணை புரியும்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் ஸ்ரீகாந்த் வைத்யா, இந்த செயல் ஒரு சமூக இயக்கமாக மாறி சிறைவாசிகளின மத்தியில் ஒரு புது ஒளியை ஏற்படுத்தி, அவர்கள் சமுதாயத்தில் தயக்கமின்றி ஒருங்கிணைந்து செயல்பட ஏதுவாக மன திடத்தை அளித்துள்ளது. வெளிப்புற பயிற்சியாளர்களுடன் இணைந்து இந்தியன் ஆயில் நிறுவன விளையாட்டு வீரர்கள் சிறை கைதிகளுக்கு விளையாட்டு ஆர்வத்தையும், நாட்டத்தையும் ஏற்படுத்துவது பெருமிதத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
கூடைப்பந்து
இந்த திட்டத்தின்படி புதுவை சிறைக்கைதிகளுக்கு கூடைப்பந்து, பேட்மிண்டன், கைப்பந்து, சதுரங்கம், டேபிள் டென்னிஸ், கேரம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்