கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் அடிப்படை வசதி கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் அடிப்படை வசதி கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-03-22 15:37 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 11-வது வார்டில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 15 குடும்பத்தினருக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கபட்டுள்ள நிலையில், முழுமையாக பட்டா இல்லாத காரணத்தால் அப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று குடியிருப்புவாசிகள் குடும்பத்தோடு கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர், தங்களது கோரிக்கை தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் மீண்டும் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். புதிதாக பேரூராட்சி நிர்வாகம் பொறுப்பு ஏற்று உள்ள நிலையில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்