அரசு பஸ் கண்ணாடி சேதம்
விபத்தில் சிக்கிய அரசு பஸ்சின் கண்ணாடி சேதம் அடைந்தது.
கோபால்பட்டி:
திண்டுக்கல்லில் இருந்து நத்தத்துக்கு நேற்று மாலை 4 மணி அளவில், அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல்-நத்தம் சாலையில், கோபால்பட்டி அருகே உள்ள விஜயநகர் துணைமின் நிலைய அலுவலகம் அருகே பஸ் சென்றது.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்த ஓட்டல் ஊழியர் ஜான் (வயது 28) என்பவர் படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கி சாலையில் விழுந்தது. இந்த விபத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் ஆகியோருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே பயணிகள் அனைவரும் அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ்சில் ஏற்றி நத்தம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.