ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தர்ணா
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடுஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் சுப்பிரமணியன், வாவாஜி பக்கீர் முகைதீன், சீனிவாசன், துணைத்தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் ராஜே ஷ் குமார் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் செல்வக்குமார் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் அண்றோ கோரிக்கையை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.
கோரிக்கை
போராட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அனைத்து உரிமைகளையும் கிராம பஞ்சாயத்து செயலாளர்களுக்கும் வழங்கி உரிய அரசாணை வெளியிட வேண்டும், கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்து பணி வரண்முறை செய்ய வேண்டும், வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
கலந்து கொண்டவர்கள்
போராட்டத்தில் தமிழ்நாடு வணிகவரித்துறை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் முருகன், தமிழ்நாடு நிலஅளவை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தூர்ராஜன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க இணை செயலாளர் ஞானராஜ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழரசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் சாம்டேனியல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.