பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். கழுமரம் ஏறி இளைஞர்கள் அசத்தினர்.

Update: 2022-03-22 15:25 GMT
நத்தம்:

மாரியம்மன் கோவில் திருவிழா

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நத்தம் மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மாசி பெருந்திருவிழா கடந்த 7-ந்ேததி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காப்புக்கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.

ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் தினமும் பால், தேன், சந்தனம் ஆகியவற்றை குடங்களில் பக்தர்கள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 

மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கை செலுத்துதல், அரண்மனை பொங்கல் வைத்தல், காவடி வகையறாக்கள் எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் இருந்து பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதேபோல் அலகு குத்தியும், மாறுவேடம் அணிந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

குழந்தை வரம் பெற்ற பக்தர்கள் கரும்பு தொட்டில் சுமந்து வந்தனர். பக்தர் ஒருவர், பறவைக்காவடி எடுத்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். 

இதபோல் கோவிலின் முன்பு கழுமரம் ஊன்றப்பட்டது. அதன்பிறகு கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு ஆர்வமுடன் கழுமரம் ஏறி அசத்தினர். கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து கழுமரம் ஏறியதை கண்டுகளித்தனர்.

பக்தி பரவசத்துடன்...

விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி மாரியம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், மலர்கள், அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

இதனையடுத்து பூக்குழி தளத்தில் காய்ந்த வேம்பு விறகு கட்டைகளையும், உப்பு, மிளகு பொட்டலங்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். முதலில்  பூசாரிகள் பூக்குழியில் இறங்கினர். 

அவர்களை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள், ஒருவர் பின் ஒருவராக நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர். சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர்.

பெண்கள் சிலர் தங்களது கைக்குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி பரவசப்படுத்தினர். மாலை முதல் இரவு வரை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பூப்பல்லக்கில் நகர்வலம்

இதைத்தொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து கம்பம், அம்மன் குளம் போய் சேர்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நத்தம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (புதன்கிழமை) காலையில் அம்பாள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையடுத்து இரவில், அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, அம்மன் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து கோவிலை சென்றடைகிறது. 

 கூடுதல் பஸ்கள் 

விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோவில் பூசாரி வகையறாவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா மேற்பார்வையில், செயல் அலுவலர் சரவணக்குமார், துப்புரவு ஆய்வாளர் செல்வி மேரி, பணியாளர்கள் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தனர்.

 இதேபோல் நத்தம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். விழாவையொட்டி மதுரை, திண்டுக்கல், மேலூர் மற்றும் நத்தம் பகுதிகளில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்